Wednesday, February 5, 2014

அக்குப்பங்சர்--மருந்தில்லா ஊசி மருத்துவம்-______________________________________

எளிதாக, நாசூக்காக செய்யப்படும் வேலைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் என்று சொல்வார்கள். ஆனால் அதே ஊசி நமது உடலில் செலுத்தினால், சிறுவயது பிள்ளைகள் ஏதேனும் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவரிடம் சென்றால், அவர் ஊசியை எடுத்தால் கண்கள் கலங்கி அழுவது நாம் அறிவோம். ஊசி என்றாலே பயந்து நடுங்கும் குழந்தை களாக நாமும்கூட சிறுவயதில் இருந்திருப்போம். ஊசி குத்துவதை

காயப்படுத்துவதாக தாக்குவதாக எண்ணுவதும், குத்தும்போது ஏற்படும் சுருக்கென்ற வலியும் ஊசியைக் கண்டு குழந்தைகள் பயப்பட காரணம்.
மருந்தோடு குத்தப்படும் ஊசியைப் போல் மருந்து இல்லாமலும் ஊசி குத்துவது உண்டு. அது தான் அக்குப்பங்சர்.


சீன மொழியில் ஷன் சியு என்று அறியப்படும் அக்குபங்சர் சீன பாரம்பரிய மருத்துவத்தில் ஒரு முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. அக்குபங்சர் என்பது லத்தீன் மொழியில் உள்ள அகுஸ் (ஊசி)பஞ்சேர் (குத்துதல்) என்ற வார்த்தைகளால் உருவான சொல்லாகும். சீன மொழியிலும் 'ஷன் சியு என்றால் ஊசி மருத்துவம் என்றே பொருள்படுகிறது.

உலகின் பழமையான, பரவலான பயன்பாட்டில் உள்ள மருத்துவ முறைகளில் ஒன்றாக அக்குபங்சர் உள்ளது. மேலும் நாளுக்கு நாள் இந்த அக்குபங்சர் சிகிச்சை முறை அதன் குணப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு பயன்கள் காரணமாக பிரபலமாகியும், பரவலாகியும் வருகிறது. சீனாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி நடைமுறையில் உள்ள இந்த அக்குபங்சர் மருத்துவம், பொதுவாக நோய்களில் வலி நிவாரணம் பெறவும், அறுவைச் சிகிச்சைக்கான மயக்கநிலை அடையவும்தான் பயன்படுத்தப்பட்டது ஆனால் அந்நிலை மாறிவிட்டது என்கிறார், ஷாங்காய் ஷுகுவாங் மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், அக்குபங்சர் சிகிச்சையாளருமான ஷன் வெய்துங்க்.


தற்போது அக்குபங்சரின் முக்கியத்துவம் வருமுன் காத்தல், தடுத்தல் என்ற அம்சத்தில் உள்ளது என்று சொல்லும் இவர், சீன பாரம்பரிய மருத்துவத்தில் அக்குபஞ்சரின் உயரிய நிலை ஒரு நபரை நீண்ட ஆயுளும், உடல்நலமும் பெறுவதற்காக பிரயோகிக்கப்பட்டது என்கிறார். இன்றைக்கு அக்குபங்சரின் சிறிய ஊசிமுனைகள் மக்கள் பலரது வேறுபட்ட பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறையாக நம்பிக்கையளித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக உடல் இளைக்க, உடல் பருமன் குறைக்கவென அக்குபங்சர் சிகிச்சையை நாடும் மக்களும், முகப்பொலிவு பெறவும், புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிடவும், உளநல மற்றும் இதர உடல் சார் பிரச்சனைகளை தீர்க்கவும் அக்குபங்சர் சிகிச்சையை நாடும் மக்களும் இன்றைக்கு வெகுவாக காணமுடிகிறது என்கிறார் மருத்துவர் ஷன் வெய்துங்க்.

நம் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை தூண்டவும், காயமடைதல் மற்றும் தளர்ச்சி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும்போது சுரக்கும் ஹார்மோன்கள் எனும் பல வகை இயக்குநீர்களை வெளிப்படுத்தவும் அக்குபங்சர் உதவும். ரத்த ஓட்டம், ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, அமிலச் சுரப்பு, சிகப்பு மற்றும் வெள்ளை அனுக்கள் தயாரிப்பு ஆகியவற்றிலும் அக்குபங்சரால் மாற்றங்
கள் அல்லது பாதிப்புகள் ஏற்படுத்த முடியும். 

அக்குபஞ்சர் ஊசிகள் குறிப்பிட்ட இடங்களில் குத்தப்படும்போது அல்லது சொருகப்படும்போது, சாந்தப்படுத்தும், ஆசுவாசப்படுத்தும், வலி தெரியாமல் இருக்கச்செய்யும், களைப்பாறச் செய்யும் தன்மை கொண்ட எண்டார்ஃபின் கள் வெளிப்படுகின்றன. இது மன அழுத்தம், சலிப்பு, எரிச்சல், பதட்டம் ஆகியவற்றை எதிர் கொள்ள உதவும். இந்த மனரீதியிலான, உளரீதி யிலான சிக்கல்கள்கூட உடல் பருமனுக்கு காரணமாக அமையும். எண்டார்பின்கள் ஜீரண மற்றும் ஹார்மோன் அல்லது இயக்குநீர் அமைவுகளை தூண்டி, வேகமாக ஓடும் சில உறுப்புகளின் அமைப்புகளை சமநிலை படுத்தும், சீராக்கும் என்கிறார் மருத்துவர் ஷன் வெய்துங்க்.



குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை, ஆட்டிசம் எனப்படும் உளநிலை கோளாறு, போன்றவைகூட அக்குபங்சரால் தீர்க்கலாம் என்கிறார் இவர். அட இதென்ன ஆச்சரியம் அக்குபங்சருக்கு 461 வகையான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது என்கிறார் 43 வயது மருத்துவரான தூ யுவான் ஹாவ். தனது குழுவினரோடு இணைந்து 4 ஆண்டுகால ஆய்வுகளின் மூலம் அக்குபங்சர் இத்தனை நோய்களுக்கு தீர்வு தரக்கூடியது என்று கண்டுபிடித்துள்ளார் இவர். 


தூ யுவான் ஹாவின் ஆய்வு முடிவுகளின் வழி அறியப்பட்ட ஒரு முக்கியமான தகவல், நரம்பு மண்டலம், ஜீரண அமைப்பு, தசைகள், எலும்பு, தோல், ஆகியவற்றிலான சிக்கல்களுக்கு அக்குபங்சரின் ஆற்றல் நல்ல பயனுள்ளதாக அமைந்து குணமடைதல் அதிகமாக இருக்கிறது என்பதாகும். குறிப்பாக நினைவிழப்பு நோய், தோலில் ஏற்படும் சிரங்குகள் அல்லது புண்கள், நரம்பு மண்டலத் திலான தாக்குதல், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு அக்குபங்சர் நல்ல பலன் தரும் சிகிச்சை என்று தனது 4 வருட ஆய்வில் தூ யுவான் ஹாவ் கண்டறிந்துள்ளார்.